national
புனேவில் வெளுத்து வாங்கிய மழை… குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம்..!
புனே மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் புனே நகரம் மற்றும் புனே மாவட்டத்தின் வெல்ஹா, முல்ஷி, போர் ஆகிய தாலுகாவை சேர்ந்த பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டன .
கடக்வாஸ்லா உள்ளிட்ட பல அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். புனே மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று பெரும்பாலான பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் மழை தொடர்பான விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் புனேவின் டெக்கான் பகுதியில் தள்ளு வண்டியை நகர்த்த முயன்ற போது மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.