national
தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்… 5 வயது சிறுமி உயிரிழப்பு..!
கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கர்நாடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மாநில அரசு டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் உயிர் பலிகளை தடுக்க முடியாமல் தவித்து வருகின்றது. நேற்று தார்வார் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருக்கின்றார்.
தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா பகுதியை சேர்ந்த கரியப்பா என்பவரின் மகள் பூர்ணிமா. இவருக்கு ஐந்து வயது ஆகின்றது. கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் உடல்நலத்தில் மாற்றம் ஏற்படாத காரணத்தினால் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குந்துகோல் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருப்பினும் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குந்துகோல் பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.