மும்பையில் ரோட் ஷோ…கொண்டாடத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்…
கோப்பையை வென்று ஆசையை நிறைவேற்றுவார்களா? இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்பதே இந்தியாவின் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரின் எதிர்பார்ப்பாகவே இருக்கும். சர்வதேச போட்டி எதுவாக இருந்தாலும் அதில் நாம் தான் வெல்ல வேண்டும் என்கின்ற வெறி இந்திய ரசிகர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர்களாக இருக்கட்டும், டெஸ்ட் போட்டிகள், இருவது ஓவர் போட்டியாக இருக்கட்டும் இந்திய அணி பங்கேற்கும் போது கோப்பையை வெல்வதே லட்சியமாக இருக்கும். அதிலும் சர்வதேச உலகக் கோப்பை போட்டிகள் என வந்து விட்டால் கோப்பை கணவு தான் முக்கியமானதாக இருக்கும்.
2011க்கு பிறகு நடந்த சர்வதேச உலக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்தியாவில் வைத்து நடந்த ஐம்பது ஓவர் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது கடுமையான விமர்சனங்களை பெற்றுக்கொடுத்தது.
இந்த நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி சாம்பியன் பட்டத்தை வென்று வந்தது இந்திய அணி. இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்று வந்து பெருமை சேர்த்துள்ளனர் நம் கிரிக்கெட் அணி வீரர்கள்.
இந்த வெற்றியை நாடே கொண்டாடி வரும் நேரத்தில் இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் கோப்பையுடன் வீரர்கள் ரசிகர்களை சந்திக்கும் விதமான ரோட் – ஷோவிற்கு இந்திய கிரிக்கெட் போர்டு ஏற்பாடு செய்தது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் துவங்க உள்ளது வெற்றிக் கொண்டாட்டம்.
மைதானத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை சென்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது இந்த ரோட்-ஷோ. இதனை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் மைதானத்தை சுற்றி.
அதே போல மும்பை கடற்கரை முழுவதும் இப்போது ரசிகர்களால் சூழப்பட்டுள்ளது. கடல் பெரிதா? குவிந்துள்ள ரசிகர்களின் எண்ணிக்கை பெரிதா? என சிந்திக்க வைக்கும் அளவில் தான் இப்போதைய மும்பை மாநகர காட்சிகள் சொல்லி வருகிறது