வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ஒரு மாத ஊதியத்தை நிதி உதவியாக வழங்கி இருக்கின்றார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.
ஒவ்வொரு மாநிலத்துறையை சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த நிதியுதவியை கொடுத்திருக்கின்றார்கள். அது மட்டும் இல்லாமல் பல அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என்று பலரும் வயநாட்டு நிலச்சரிவுக்காக உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்கள். இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது ஒரு மாத சம்பளத்தை கேரளா காங்கிரசுக்கு நன்கொடையாக வழங்கி இருக்கின்றார்.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக ராகுல் காந்தி சென்ற போது அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக காங்கிரசின் மாநில பிரிவு சேகரிக்கும் நிதிக்கு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.