சமீபத்தில் நடந்து முடிந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது இந்திய அணி. தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதல் முறையாக விளையாடியது தென்னாப்பிரிக்க அணி.
கோப்பையை வெல்ல இரு அணிகளும் முனைப்போடு விளையாடியது. இறுதி ஒவர் வரை பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் கடைசி ஒவரில் இந்திய வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐம்பது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பலமிக்க ஆஸ்திரேலிய அணியோடு இறுதிப் போட்டியில் களம் கண்ட இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனமுடைந்தனர். இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதாக இருபது ஓவர் உலகக்கோப்பையை வென்று மகிழ்ச்சியடையச் செய்தனர் இந்திய வீரர்கள்.
இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.
போட்டியில் பங்கேற்க அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்.
தாயகம் திரும்பிய ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களை சந்தித்து அவர்களை வாழ்த்தி, பாராட்டினார் பிரதமர் மோடி. வீரர்களோடு கலந்துரையாடிய மோடி அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
வெற்றி பெற்று பெருமை சேர்த்த இந்திய அணிக்கு மிகப் பெரிய தொகையை பரிசாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்நிலையில் கோப்பையுடன் இந்திய வீரர்கள் பங்கேற்கும் ரோட் ஷோ இன்று நடைபெற உள்ளது.