வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார் என்று பிரதமர் மோடி உறுதி அளித்து இருக்கின்றார்.
குஜராத் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழை தற்போது தென்மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்து தாழ்வு மண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கின. குளம் ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
அது மட்டும் இல்லாமல் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் மூழ்கியது. ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. ஐந்து மாவட்டங்களும் உட்பட்ட 294 கிராமங்களில் வசிக்கும் 13 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு ஆந்திராவில் தற்போது வரை 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் தொடர்ந்து மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆந்திராவைப் போலவே அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் கன மழை கொட்டி வருகின்றது.
அங்குள்ள கம்மம் மாவட்டத்தில் 52.1 மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேபோல் மெஹபூபாபத் மாவட்டமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழை வெள்ளத்தால் தெலுங்கானா எதிர்கொண்டு வரும் மோசமான சூழல் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மாநிலத்தில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சென்னை, விசாகப்பட்டினம், அசாமில் இருந்து தலா மூன்று குழுவினர் ஹைதராபாத்துக்கு விரைந்து இருக்கிறார்கள். சில மாவட்டங்களுக்கு இன்று காலை வரை கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் மழை காரணமாக இதுவரை 9 பேர் பலியாகி இருக்கிறார்கள். 3 பேர் மாயமாகியுள்ளனர் மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் மழை காரணமாக தமிழக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் உரையாடினார். அப்போது கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு மாநிலங்களின் நிலைமையை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நிவாரணங்களையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கின்றார்.