ரயிலில் மாட்டு இறைச்சியை எடுத்து வந்த முதியவரை சக பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக முதியவரை சகப் பயணிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்திலிருந்து கல்யாண் நகருக்கு ஹாஜி அஷ்ரப் முன்யார் என்ற முதியவர் தனது மகளுடன் சாதாரண பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது பிளாஸ்டிக் ஜாடியில் இறைச்சி துண்டுகள் இருப்பதை சக பயணிகள் பார்த்திருக்கிறார்கள். இது குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது அவர் மாட்டு இறைச்சி தான் என்று தெரிவித்திருக்கின்றார்.
மேலும் மாட்டு இறைச்சி என்று குற்றம் சாட்டிய சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து முதியவரை தாக்கிய நபர்களை கண்டுபிடித்து விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று ரயில்வே போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

