சினிமாவும் அரசியலும் தமிழ்நாட்டுக்கு ரெண்டு கண்ணு மாதிரி. இப்போ அந்த ரெண்டு கண்ணையும் ஒரே இடத்துல குத்த வச்சிருக்கு சிவகார்த்திகேயனோட ‘பராசக்தி’. 1960-களில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பின்னணியா வச்சு சுதா கொங்கரா இயக்கியிருக்கிற இந்தப் படம், ரிலீஸாவதற்கு முன்னாடியே தணிக்கை வாரியத்தோட கத்திரிக்கோலுக்கு பலியாகிடுச்சு. கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்கள்ல கட் கொடுத்த தணிக்கை வாரியம், படத்தோட ஆன்மாவையே உருக்கிடுச்சுன்னு ரசிகர்கள் வருத்தப்பட்டுட்டு இருந்தப்போ, படக்குழு ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்காங்க. அதுதான் நீக்கப்பட்ட காட்சிகளின் வெளியீடு!
நிஜத்தைச் சொல்லணும்னா, ஒரு வரலாற்றுப் படத்தை எடுக்கும்போது அந்தந்தக் காலக்கட்டத்துல இருந்த அரசியல் தலைவர்களோட பேச்சையும், செயலையும் காட்டாம இருக்க முடியாது. அப்படி இந்தப் படத்துல அறிஞர் அண்ணா பேசுற மாதிரியான சில வசனங்களை சென்சார் போர்டு தூக்கிடுச்சு. “அச்சம் இருக்கும் வரையில் இங்கு யார் ஆண்டாலும் அண்ணா துரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” அப்படிங்கிற அந்த அண்ணாவின் கணீர் குரல் வசனத்தை படத்துல இருந்து நீக்கினதுக்கு எதிர்ப்பு கிளம்புச்சு. ஆனா, “படம் ரிலீஸாகணுமே”ன்னு வேற வழி இல்லாம அந்த மாற்றங்களை ஏத்துக்கிட்ட படக்குழு, இப்போ அந்த நீக்கப்பட்ட காட்சியை மட்டும் தனியா சோஷியல் மீடியால ரிலீஸ் பண்ணியிருக்காங்க.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு கடந்து போக முடியல. ஏன்னா, இந்தப் படத்துக்கு வந்த சோதனைகள் அப்படி. ஒரு பக்கம் விஜய் நடிச்ச ‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்கல், இன்னொரு பக்கம் ‘பராசக்தி’க்கு கொடுக்கப்பட்ட 25 கட்ஸ்னு கோலிவுட்டே ரணகளமா இருந்துச்சு. இப்போ இந்த நீக்கப்பட்ட காட்சி வெளியானதுல இருந்து, நெட்டிசன்கள் “நிஜமான பராசக்தி இதுதான்”னு அந்த வீடியோவை ஷேர் பண்ணி டிரெண்ட் பண்ணிட்டு வர்றாங்க. தணிக்கை வாரியத்தோட இந்த ‘கெடுபிடி’ படத்துக்கு ஒரு வகையில ஓப்பனிங் கூட்டத்தை ஏத்தி விட்டுடுச்சுன்னே சொல்லலாம். எது எப்படியோ, சென்சார் வெட்டினாலும் மக்களோட உணர்வுகளை யாராலயும் வெட்ட முடியாதுங்கிறதுக்கு இந்த வீடியோவே ஒரு சாட்சி!











