அக்காவோடு ஒரு தலைக்காதல்… பின்னர் தங்கையோடு காதல்! கொலையில் முடிந்த எதிர்ப்பு!

அக்காவோடு ஒரு தலைக்காதல்… பின்னர் தங்கையோடு காதல்! கொலையில் முடிந்த எதிர்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் தங்கள் காதலுக்கு குறுக்காக நின்ற பெண்ணின் அக்காவைக் காதலர்கள் கொலை செய்துள்ளனர்.

நாமக்கல் அருகே கொசவம்பட்டி தேவேந்திர நகரப் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். கல்லூரி மாணவரான இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தன்னை விட பெரிய மாணவிக்குக் காதல் ப்ரபோஸ் செய்துள்ளார். ஆனால் அவர் ஏற்காததால் அவரது தங்கையைக் காதலிக்க ஆரம்பித்துள்ளார். இந்த விஷயம் அக்காவுக்குத் தெரியவர அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை வீட்டில் இருந்த தன் அக்கா கையை வெட்டிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளதாக மாணவி தன் பெற்றோருக்கு போனில் அழைத்து கூறியுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னால் அந்த பெண் இறக்கவே, தற்கொலை வழக்காக போலீஸார் இதைப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் பிரேதப் பரிசோதனை முடிவில் கழுத்தை நெறித்துதான் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து சந்தேகமான போலிஸார் சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இருந்த தங்கையின் போனை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் ராகுலுக்கு போன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரையும் போலிஸார் விசாரணை செய்ததில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் சேர்ந்து அவரைக் கழுத்தை நெறித்தும் பின்னர் கத்தியால் கை நரம்பை அறுத்தும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சம்பவமானது நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.