விஜய் நடிப்பில் அடுத்ததாக இருக்கும் புதிய படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
விஜய் தற்போது லோகேஷ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 9 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதையொட்டி இப்போது படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் சுதா கொங்கராவின் பெயர் முன்னர் அடிபட்டாலும் இப்போது முருகதாஸ்தான் அந்த படத்தை இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2021 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
சுதா கொங்கரா தளபதி 65 படத்தை இயக்குவது உறுதியான நிலையில் இடையில் முருகதாஸ் எப்படி வந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சுதாவின் கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் அதற்கான முன் தயாரிப்பு வேலைகளை முடித்து படத்தின் ஷூட்டிங் தொடங்க, எப்படியும் நவம்பர் மாதம் ஆகிவிடும் என சொல்லியுள்ளாராம்.
அதனால் அவ்வளவு நாட்கள் சும்மா இருக்க விரும்பாத விஜய் அதற்கிடையில் ஒரு படம் நடித்துவிட்டு சுதாவின் கதையில் அடுத்ததாக நடிக்கலாம் என நினைத்துள்ளார். இதற்கிடையில் தனக்கு மூன்று ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் முருகதாஸ் துப்பாக்கி 2 கதையை சொல்லியுள்ளார். முருகதாஸ் திரைக்கதையை முடித்துள்ள நிலையில் இப்போது அந்த கதையில் நடிக்க இருக்கிறார்.