cinema news
குற்றால அருவிகளில் குளிக்க அலைமோதும் கூட்டம்…ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்….
ஜூன், ஜூலை மாதங்கள் வந்து விட்டாலே சுற்றுலா பிரியர்கள் அனைவரின் பார்வையையும் தன் மீது திரும்ப வைத்து விடும் குற்றாலம். தமிழகம் மட்டும் அல்ல சீசன் நேரத்தில் இங்கு குளித்து நீராடி மகிழ நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கூட்டம் கூட்டமாய் மக்கள் குற்றாலத்தை நோக்கி படையெடுக்க துவங்கிவிடுவார்கள்.
இந்தாண்டு குற்றாலத்தில் சீசன் துவங்கி அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கியுள்ளது. கடந்த வார துவக்கத்தில் எல்லா அருவிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
(இன்று காலையில் எடுக்கப்பட்ட படம்)
யதார்த்த நிலை அடைந்த பிறகே குளிப்பதற்கு விடுக்கப்பட்டிருந்த தடையானது நீக்கப்பட்டு, பொது மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆயினும் கடந்த வாரத்தில் குற்றால சீசனில் திடீர், திடீர் மாற்றங்கள் இருந்து வந்தது. சொல்லப்போனல் வியாழக்கிழமைக்கு பிறகே அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணங்கள் நிறைவேறியது. அதற்கு முன் அடிக்கடி குளிக்க தடை விதிக்கப்பட்டும் வந்தது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. அனைத்து அருவிகளிலும் இன்று காலை பதினோரு மனி நிலவரப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் இங்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
வெயிலின் தாக்கம் சிறிது குறைவாகவே உள்ளது. பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவில் சாரல், காற்று, குளிர்ந்த சூழல் இல்லாத போதும் அருவிகளில் விழுந்து வரும் தண்ணீர் குளிக்க வந்தவர்களை ஆனந்தப்படுத்தி வருகிறது. விடுமுறை தினம் இன்று என்பதால் நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.