கடந்த 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளிவந்தது சதிலீலாவதி திரைப்படம். என்னடா இது சதிலீலாவதி என பெயர் வைத்திருக்கிறார்களே என ஆச்சரியமாக இருந்தது ஏனென்றால் சதிலீலாவதி என்பது எம்ஜிஆர் நடித்த வந்த அந்த கால திரைப்படம். இப்போது வரும் எல்லா படங்களிலும் பழைய பெயரை பயன்படுத்துகிறார்கள். அப்போது இதெல்லாம் கொஞ்சம் ஆச்சரியமான விஷயமாக தான் இருந்தது.
கமல்ஹாசன் ஏற்கனவே இயக்குனர் ஜி என் ரங்கராஜன் நலிவடைந்த காலத்தில் அவரது ப்ரொடக்ஷனுக்கு மகராசன் திரைப்படத்தை கமர்சியலாக செய்து கொடுத்து ஓரளவு பொருளாதார பிரச்சினைகளில் இருந்து அவரை மீட்டெடுக்க உதவினார்.
அதுபோலவே தனது ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக பாலுமகேந்திரா அவர்களுக்கு, உதவி செய்யும் பொருட்டு அவரது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொருட்டு இந்த சதிலீலாவதி படத்தை இயக்கும் பொறுப்புக்கு தனது குருநாதர்களின் ஒருவரான பாலுமகேந்திராவை தேர்ந்தெடுத்தார் கமல் .
இந்தப் படம் கமலின் நெருங்கிய நண்பரும் மறைந்த கதாசிரியருமான அனந்து எழுதிய கதை. இந்த படம் ஆங்கிலத்தில் வந்த சி டெவில் என்ற திரைப்படத்தை உல்டா செய்ததுதான்.
பாலு மகேந்திரா இதுபோல இரண்டு மனைவிகள் சம்பந்தப்பட்ட கதையில் கில்லாடி ஏற்கனவே அவர் ரெட்டைவால் குருவி, மறுபடியும் போன்ற படங்களை எல்லாம் அந்த டைப்பில் தான் இயக்கி இருக்கிறார். இதை வைத்துதான் பாலு மகேந்திராவை கமலஹாசன் தேர்ந்தெடுத்தாரோ என்னவோ.
கமல்ஹாசன் இப்படத்திற்காக கோவை சரளாவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தது அந்த நேரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது அப்புறம் படம் பார்த்த பிறகு எதற்காக என்று புரிந்து ரசிகர்கள் சந்தோஷம் அடைந்தனர். படமும் தமிழில் மட்டுமல்ல அது ஹிந்தியில் பிவி நம்பர் ஒன் ஒன் என்ற பெயரிலும் கன்னடத்தில் ராமா பாமா சாமா என்ற பெயரிலும் வெளிவந்தது.

