cinema news
தமிழ் திரையுலகில் பாலியல் அத்துமீறல்… நடிகை சனம் செட்டி ஆவேசம்…!
நடிகை சனம் செட்டி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கின்றார். இது தொடர்பாக காவல்துறை அனுமதி அளிக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சனம் செட்டி மனு அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து பேச கஷ்டமாக இருக்கின்றது. கடந்த ஒரு வாரத்தில் நான்கு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. கொல்கத்தாவில் நடந்த பாலியல் வன்கொடுமைக்காக இங்கு ஏன் போராட வேண்டும் என்று கூறுகிறார்கள். நேற்று கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
இதில் அப்பள்ளியின் முதல்வர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். பெங்களூரில் 21 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. மகாராஷ்டிரா பள்ளியில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகின்றது. நிர்பயா வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை தரக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரம் எனக்கு தெரியாது. ஆனால் நான் அதை வரவேற்கிறேன்.
இது போன்ற ஒரு அறிக்கையை அவர்கள் கொண்டு வந்ததற்கு ஹேமாவுக்கும் கேரளா அரசுக்கும் நன்றி. தமிழ் திரையுலகில் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் இருக்கின்றது. பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை தமிழ் திரையுலகிலும் இருக்கின்றது. கேரளாவை போன்று தமிழகத்திலும் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.