நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்!
பிடிவாரண்டில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரின் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இருவருக்கும் எதிரான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனால், ஜாமீன் கோரி மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, மீராமிதுனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.