பாரதிராஜா முதல் மரியாதை, வேதம் புதிது இது போன்ற படங்களுக்கு பிறகு பல்வேறு விதமான படங்களை இயக்கினாலும், இந்த படங்கள் கொடுத்த சக்சஸ், புகழ் பல வருடங்களாக அவருக்கு அடுத்து கிடைப்பதில் தாமதம் நிலவியது. இந்த படங்களுக்கு பிறகு பல்வேறு படங்களை எடுத்துவிட்டாலும் கமர்சியல் சக்சஸ் என்பது இவருக்கு சில வருடங்கள் அமையவில்லை.

அந்த நேரத்தில் தன்னுடைய உதவியாளர் ரத்னகுமார் ஒரு சொல்ல அந்த கதைதான் கிழக்கு சீமையிலே படத்தின் கதை. அந்த கதையை அப்படியே படமாக்க முனைந்து படமாக்கி வெற்றியும் பெற்றார் பாரதிராஜா.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்க அதுவரை இளையராஜா, தேவேந்திரன் என இசையமைப்பாளர்களை வைத்து படம் இயக்கிய பாரதிராஜா முதல் முறையாக ஏ.ஆர் ரஹ்மானிடம் செல்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் அந்த நேரத்தில் வளர்ந்து வந்த மாடர்ன் இசையமைப்பாளர், அவர் முதன் முதலில் கிராமத்து படத்துக்காக போட்டு பெரிய அளவில் ஆல்பம் ஹிட் ஆனது என்றால் அது இந்த படத்துக்குத்தான்.
மானூத்து மந்தையிலே, ஆத்தங்கர மரமே, தென் கிழக்கு சீமையிலே, எதுக்கு பொண்டாட்டி, கத்தாழம் காட்டு வழி, என அனைத்து பாடல்களும் சிறப்பாக இருந்தன.
பாரதிராஜா தான் ஏற்கனவே காண்பித்த மதுரை, தேனி பகுதிகளின் வாழ்வியல் முறைதான் என்றாலும் இப்படத்தின் கதை வேறு கோணத்தில் சொல்லப்பட்டிருந்தது. விஜயகுமார், ராதிகா, நெப்போலியன், பாண்டியன், வடிவேல் என அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.
1993 தீபாவளிக்கு வந்து வெற்றி பெற்ற படம் இது.

