கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ள நிலையில் அதற்காக திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் நரகாசூரன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் சில பல காரணங்களால் வெளிவராமலே போனது. அதையடுத்து அவர் இயக்கிய மாபியா படம் எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியாகி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்பு இப்போது அவருக்குக் கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்காததால் D43 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷும் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரசன்னாவும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளுக்காக மலையாள எழுத்தாளர்களான ஷார்பு மற்றும் சுகாஸ் ஆகியோரோடு இணைந்து கார்த்திக் நரேன் பணியாற்றி வருகிறார். மாபியா திரைக்கதை பற்றி மிகவும் மோசமான விமர்சனங்கள் எழுந்ததால் இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.