மாஸ்டர் படவிழாவில் மனிதர்களை மனிதர்கள்தான் காப்பாற்ற வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி பேசியது பற்றி விமர்சனம் செய்த காயத்ரி ரகுராம் இப்போது தன் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அப்போது விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி ‘கடவுளை யாரும் காப்பாற்றுகிறேன் என்று சொல்கிறவர்களை நம்பாதீர்க்ள். கொரோனாவை விட இங்கு வேறு சில விஷயங்கள் அச்சுறுத்தலாய் இருக்கிறது. மனிதனுக்கு மனிதன்தான் உதவ வேண்டும். மனிதனுக்கு மதத்தை விட மனிதம்தான் தேவையானது’ எனக் கூறினார்.
இந்த கருத்தைக் கண்டிக்கும் விதமாக பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் ‘கடவுளை நம்பும் மக்களிடமிருந்து அவர்களது நம்பிக்கையை அழிக்க முடியாது. மனிதனின் வெற்றியை நிர்ணயிப்பது கடவுள்தான். சகமனிதனல்ல’ எனக் கூறியிருந்தார். இதையடுத்து காயத்ரி ரகுராம் கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் ‘நான் அவர் கருத்தை எதிர்க்கவில்லை. சுதந்திரமாக பேசுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அதே போல எனது கருத்தைத் தெரிவிக்கவும் எனக்கு உரிமை உள்ளது. அவரது கருத்தில் நான் உடன்படவில்லை என்பதைதான் தெரிவித்திருந்தேன்.’ எனக் கூறியுள்ளார்.