திரௌபதி படத்தின் இயக்குனரும் அவரது ஆதரவாளர்களும் தனக்கும் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக தொகுப்பாளர் விக்ரமன் புகாரளித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான திரௌபதி படம் சாதியக் கருத்துகளைக் கொண்டிருந்தாக சொல்லப்பட்டாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை முன்னிட்டு அந்த படத்தின் இயக்குனர் மோகன் கலாட்டா என்ற இணையச் சேனலுக்கு அளித்த பேட்டியில் தொகுப்பாளர் விக்ரமன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் பாதியிலேயே எழுந்து சென்றது பரபரப்பை உருவாக்கியது.
இதனால் கடுப்பான இயக்குனர் மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விக்ரமனின் தொலைபேசி எண்ணை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரைப் பற்றி ஆபாசமாகப் பேசியும் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து விக்ரமன் சென்னையில் உள்ள காவல் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்று மோகன் மீது புகாரளித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘என்னையும் என் குடும்பத்தினருக்கும் மோகனின் ஆதரவாளர்கள் மிரட்டுகின்றனர். மேலும் என் சாதி குறித்து கேள்வி எழுப்பி என்னை ஒரு அமைப்பின் பிரதிநிதியாக்க பார்க்கின்றனர்’ எனத் தெரிவித்தார்.