நடிகர் சேதுராமன் மரணம் தொடர்பான வதந்தி – ரசிகர்களுக்கு நண்பர் வேண்டுகோள்!

நடிகர் சேதுராமன் மரணம் தொடர்பான வதந்தி – ரசிகர்களுக்கு நண்பர் வேண்டுகோள்!

இரு தினங்களுக்கு முன்னர் மறைந்த மருத்துவர் மற்றும் நடிகர் சேதுராமன் கொரோனாவில் இறந்ததாக எழுந்துள்ள வதந்திகளுக்கு அவரது நண்பர் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் இருக்கும் பிரபல தோல் மருத்துவர்களில் ஒருவராக இருந்தவர் சேதுராமன். இவர் நடிகர் சந்தானத்தின் நண்பர். அதுமட்டுமில்லாமல், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பலர் தோல் சிகிச்சை பெற்று வந்தார்கள்.மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவர்.

இந்நிலையில் திடீர் அவதாரமாக தனது நண்பர் சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தில் சேதுவை ஹீரோவாக அறிமுகமாகினார். அந்த படம் வெற்றி பெற்றாலும் சேதுவுக்கு அதன் பின்னர் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் மருத்துவத்துறையில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 36. இந்த செய்தியானது அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. சேதுவின் மரணசெய்தி அறிந்த திரையுலகினர் மற்றும் அவரிடம் சிகிச்சை பெற்ற பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சேதுவின் மரணத்தை அடுத்து சமூகவலைதளங்களில் அவர், கொரொனா தொற்று காரணமாக இறந்ததாக சிலர் வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தனர். இதுகுறித்து சேதுவின் நண்பரான அஸ்வின் மறுத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என் வாழ்க்கை நிச்சயம் முன்புபோன்று இருக்காது சேது. வாழ்க்கையின் வலி மிகுந்த நாள் இது. 30 வருட நட்பு, சகோதரத்துவம். இந்த உலகத்திற்காகவும் இளைஞர்களுக்காகவும் நாம் கொண்டிருந்த திட்டங்கள், இந்த உலகத்தில் நன்மையும், மகிழ்ச்சியும் மட்டும் இருக்க வேண்டும் என நினைத்தோம். நீ செல்லும் போது என்னில் இருந்து ஒரு பகுதியையும் எடுத்து சென்றுவிட்டாய். மக்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். அவர் இறந்தது மாரடைப்பால், கொரோனாவால் அல்ல. தயவு செய்து இந்தமாதிரியான நேரத்தில் வதந்திகளைப் பரப்பாதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.