தொலைக்காட்சிகளில் பழைய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் பட்டு வரும் நிலையில் லொள்ளு சபா நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பள்ளி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகள் கடந்த 19 ஆம் தேதியே நிறுத்தப்பட்டன.
இதனால் இதுவரை கைவசம் இருந்த எபிசோட்களை ஒளிப்பரப்பி வந்த தொலைக்காட்சி சேனல்கள் இப்போது புதிய எபிசோட்கள் இல்லாமல் சீரியல்களின் பழைய எபிசோட்களை ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் சில தொலைக்காட்சி சேனல்கள் பழைய பிரபலமான சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் 90களில் தூர்தர்ஷனில் மிகவும் பிரபலமாக இருந்த ராமாயணம் சீரியல் ஏற்கனவே காலையும் மாலையும் ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 90ஸ் கிட்ஸ்களின் மற்றொரு பிரபலமான தொலைக்காட்சி சீரியலான சக்திமான் மீண்டும் நாளையில் இருந்து ஒளிபரப்பப்பட உள்ளது. இதனால் 90ஸ் கிட்ஸ்கள் உற்சாகமாகியுள்ளனர்.
ஆனால் ஒரு சிலரோ தங்களது மனம்கவர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான லொள்ளுசபாவை ஒளிபரப்ப சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர். பிரபல கிரிக்கெட் வீரரான ரவிசந்திரன் அஸ்வின் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கூறியுள்ளார்.