பிரபல நடிகர் ரியாஸ்கான் தனது வீட்டின் முன் கும்பலாக நின்றவர்களைக் கலைய சொன்னதால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளது ஒரு கும்பல்.
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் போது கூட தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அனால் பலரும் இதைப் பின்பற்றுவதில்லை. இதனால் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரியாஸ்கான் வீட்டின் முன்னர் ஒரு கும்பல் கூட்டமாக நின்றுள்ளது. இதுபோல கும்பலாக நின்றால் வைரஸ் தொற்று அபாயம் இருப்பதாக ரியாஸ்கான் அவர்களிடம் எடுத்துக் கூற அதைக் காதில் வாங்காத அந்த கும்பல் அவரிடம் சண்டைக்கு வந்துள்ளனர். மேலும் அதில் ஒரு சிலர் ரியாஸ் கானைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இது சம்மந்தமாக ரியாஸ்கான் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.