cinema news
கடைசியில் உண்மையான வதந்திகள்… மனைவியை பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவி…!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தன்னுடைய சிறப்பான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கின்றார். சமீப நாட்களாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது.
அதை தொடர்ந்து வெளியான சைரன், அகிலன் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வி படமாக அமைந்தது. சமீப நாட்களாக அவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் இருவர் தரப்பில் இருந்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தற்போது தனது மனைவியை பிரிவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் ஜெயம் ரவி தெரிவித்திருந்ததாவது “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களை கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும் திரையில்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரைத்துறை நண்பர்கள் பத்திரிக்கை ஊடகத்துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள் என் ரசிகர்கள் அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகின்றேன்.
மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிக கடினமான முடிவை எடுத்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்டது அல்ல.
என்னை சார்ந்தவர்களின் நலன்களை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும் படி அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். இது என் சொந்த முடிவாகும்.
இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். இவர் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் எனவும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.