இந்திய அணியின் கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்களை ஆஸி வீரர்கள் ஏன் பகைத்துக் கொள்வதில்லை என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்த கருத்துக்கு ஆஸி கேப்டன் டிம் பெய்ன் பதிலளித்துள்ளார்.
உலகின் புகழ்பெற்ற கிர்க்கெட் அணியான ஆஸ்திரேலியா ஸ்லெட்ஜிங்குக்கும் புகழ்பெற்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் பெரிதாக ஸ்லெட்ஜிங்குகள் எதையும் செய்வதில்லை. அதுவும் இந்தியாவுடன் விளையாடும் போது கோலி போன்ற வீரர்களிடம் அடக்கி வாசிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் என்ன என ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
அவர் சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் ‘உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக தற்போது பிசிசிஐ இருந்து வருகிறது. அவர்களின் நிதி நிலைமை பலமாக இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட எல்லா அணிகளும் அவர்களிடம் பணிந்தன. ஆக்ரோஷமான வீரர்கள் கூட கோலியுடன் ஐபிஎல் அணியில் விளையாடி பல கோடிகளை ஆறே வாரங்களில் சம்பாதிக்கவேண்டும் என வீரர்கள் மனக்கணக்கு போட்டனர். இதனால் ஆஸ்திரேலிய அணியிடம் வழக்கமான ஆக்ரோஷம் காணப்படவில்லை.’ என அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதை ஆஸியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் மறுத்துள்ளார். அவரது சமீபத்தைய பேச்சில் ‘ஆஸியில் நடந்த டெஸ்ட் போட்டிகளின் போது கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம். ஏனென்றால் அதன்மூலம் சிறப்பாக விளையாடுவார் என எண்ணினோம்.. விராட் கோலிக்குப் பந்துவீசும்போது யாரும் ஐபிஎல் ஒப்பந்தத்தை எண்ணிப் பார்ப்பதில்லை’ எனக் கூறியுள்ளார்.