கொரோனா நிதி திரட்டுவதற்காக இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடத்தவேண்டும் என அக்தர் கூறிய நிலையில் அதைக் கபில்தேவ் மறுத்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சனை காரணமாக 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இரு நாட்டுத் தொடர் நடக்கவில்லை. ஆனால் உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை போன்ற பொதுவான தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கொரோனாவால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு நிதி திரட்ட போட்டி நடத்தலாம் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரது யோசனையை மறுத்துள்ள கபில்தேவ் ‘பிசிசிஐ ஒரு பெரியத் தொகையைக் கொரோனா நிவாரணமாக நம்நாட்டுக்குக் கொடுத்துள்ளது. தேவைப்பட்டால் இன்னும் கொடுக்குமளவுக்கு நிதி உள்ளது. இப்போதுள்ள நிலைமையில் போட்டிகளை நடத்தி வீரர்களுக்கு ஆபத்தை விளைவிக்க முடியாது. மேலும் 3 போட்டிகளில் எவ்வளவு நிதி சேர்ந்து விடப்போகிறது? நெல்சன் மண்டேலா மிகச்சிறிய சிறையில் 27 ஆண்டுகள் கழித்தார். அதை ஒப்பிடும்போது நாமெல்லோரும் வசதியாகவே இருக்கிறோம்.’ எனக் கூறியுள்ளார்.