திறமையான இளம் வீரர்களைக் கண்டெடுக்க மகளிர் அணிக்கும் ஐபிஎல் தொடர் தேவை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனாலும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து கோப்பையைக் கைநழுவ விட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து பேசிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மகளிர் அணிக்கும் ஐபிஎல் போல தொடர் நடத்தி சிறந்த வீரர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என ஆலோசனைக் கூறியுள்ளார். மேலும் ‘ஆஸ்திரேலியாவில் ஆடவர்களுக்கு நடப்பது போலவே மகளிருக்கும் பிக்பாஷ் தொடர் நடத்தப்படுகிறது. அதுபோல இந்தியாவிலும் மகளிர் அணிக்கு ஐபிஎல் போல தொடர்கள் நடத்தப்படவேண்டும்.
உடனடியாக இல்லாவிட்டாலும் வரும் ஆண்டுகளில் பிசிசிஐ தலைவர் கங்குலி முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணிக்கு கிடைப்பது போல பல நல்ல வீரர்கள் கிடைப்பார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.