இந்திய அணி உலகக்கோப்பையை இழந்துள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி வீராங்கனைகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்துள்ளது. இந்த தோல்வியை ஏற்க முடியாத வீராங்கனைகள் மைதானத்திலேயே அழுதது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்திய வீராங்கனைகளுக்கு பிசிசிஐ தலைவரான கங்குலி ஆறுதல் கூறியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அடுத்தடுத்து இரண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள்… நீங்கள் சிறந்த அணி. ஒருநாள் நாம் இருக்க வேண்டிய இடத்தில் இருப்போம். ’எனத் தெரிவித்துள்ளார். மேலும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும் அணியினருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.