நேற்று ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் அதற்கு முந்தைய நாளில் மட்டும் 220 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 340க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக சனிக்கிழமை மது விற்பனை அதிகமாகியுள்ளது. ஞாயிற்றுக் கிழமை மது கிடைக்காது என்பதால் சனிக் கிழமையே குடிமகன்கள் மதுவை வாங்கி வைத்துள்ளனர். இதனால் மது விற்பனை சனிக்கிழமை மட்டும் 220 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.
வழக்கமாக வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிறு போன்ற வாரவிடுமுறை நாட்களில் ₹120 கோடி வரை டாஸ்மாக்கில் மதுவிற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.