தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி குணமாகியுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் முதல் கொரோனா உயிரிழப்பாக மதுரையைச் சேர்ந்த நோயாளி உயிரிழந்தார்.இந்நிலையில் தற்போது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இரண்டாவதாக கண்டறியப்பட்ட நோயாளி முழுவதும் குணமாகியுள்ளார். இதுபற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘தமிழ்நாட்டில் இரண்டாவதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வருகிறார். முக்கியமான இரண்டு சோதனைகளுக்குப் பிறகு அவர் உடலில் கொரோனா வைரஸ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவார்’ எனத் தெரிவித்துள்ளார்.