விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததை அடுத்து காலியான விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன் படி கடந்த பத்தாம் தேதி வாக்கு எண்ணிக்கை விக்கிரவாண்டியில் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி தற்போது வரை நடந்து வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள், நாம் தமிழர் கட்சிகள் முறையே இரண்டாவது, மூன்றாம் இடங்களில் இருந்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்றுள்ள முன்னிலையின் அடிப்படையில் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இடையே பேசியிருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ள விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இடைத்தேர்தல்களில் போட்டியிட மாட்டோம் என்ற பா.ம.க.வின் முடிவு விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டதன் மர்மம் என்ன என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தேர்தலில் போட்டியிட்டால் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் அதிமுக இந்த தேர்தலை தவிர்த்து விட்டது. பா.ம.க.வுடன் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க. கிளப்பி விட்ட அவதூறுகளை எல்லாம் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் நம்பி விடாமல், வீணர்களை விரட்டியடித்து விட்டார்கள் என்றார்.
தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை எடை போட்டுச் சொன்ன விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.