Latest News
துரோகத்தின் மறுபெயர் பழனிசாமி…அண்ணாமலை அதிரடி குற்றச்சாட்டு…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக நின்றிருந்தால் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தையே பிடித்திருக்கும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதற்கு, கடந்த தேர்தல்களில் அதிமுக, பா.ஜ.க. வாங்கிய ஓட்டுக்களை ஒப்பிட்டு பதிலளித்திருந்தார் பழனிசாமி இன்று.
அதோடு அண்ணாமலை மாநிலத் தலைவரான பிறகு தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக எப்படி சொல்ல முடியும் என எடப்பாடி கேள்வி எழுப்பியிருந்தார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி சந்தித்த நேரங்களில் தன்னருகே உட்கார வைப்பார். பழனிசாமிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
அதை எல்லாம் நினைவில் கொள்ளாமல் தேர்தல் நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறி துரோகம் செய்து விட்டார் என எடப்பாடி மீது குற்றம் சாட்டினார். துரோகம் என்பதற்கு மறு பெயர் பழனிசாமி என்றே சொல்லலாம் என காட்டமாக பேசினார்.
அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என தரவரிசையில் ஒன்றாம், இரண்டாம் இடத்தில் இருந்த கட்சி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுக்களே எடப்பாடியின் தலைமையை பற்றி சொல்லிவிடும் என்றார்.
அதே நேரத்தில் அதிமுக – பாஜக இருகட்சிகளையும் ஒப்பிட்டு பேசுவதற்கு காரணம் சமீபத்திய தேர்தலில் பா.ஜ.க. வாங்கிய அதிகமான ஓட்டுக்கள் என சொன்னார் அண்ணாமலை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவரிடையே வார்த்தை போர் வலுத்து வருகிறது. அதே நேரத்தில் இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் களத்தில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.