தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 234 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மேலும் 75 பேருக்குக் கோரொனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் 309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்ட்ராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.