அரியலூரைச் சேர்ந்த சென்னையில் வேலை பார்த்த பெண்ணுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் ஒரு நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வந்துள்ளார் அரியலூரைச் சேர்ந்த அந்த பெண். கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகமாவதை அடுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து அரியலூருக்குத் திரும்பியுள்ளார். அங்கே அவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அவர் பணியாற்றிய பீனிக்ஸ் மால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட தேதிகளில் வந்து சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்த 3200 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட நிலையில் இப்போது அந்த 3200 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.