தமிழகத்தில் கொரோனா அபாயம் உள்ள மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 340க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
மத்திய அரசு இந்தியாவில் கொரோனா பரவ அதிகவாய்ப்பு உள்ள 80 மாவட்டங்களை பட்டியலிட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த மூன்று மாவட்டங்களையும் மற்ற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என சொல்லப்படுகிறது.
சம்மந்தப்பட்ட மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்களும், தமிழக முதல்வர் அதுகுறித்து எடப்பாடி பழனிசாமியுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.