கல்வி செய்திகள்
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை நடத்தபோவது யாரு? மாணவர்கள் குழப்பம்!
பொறியியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம்.கே சூரப்பா நடத்திவந்தார்.தற்போது, மாணவர் கலந்தாய்வு பணியில் இருந்து அவர் விலகியுள்ளார். கலந்தாய்வு பணியால், பல்கலைக்கழக பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி அப்பணியில் இருந்து அவர் நீங்கியுள்ளார்.
ஆனால், பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவில் கூடுதலாக இணைத் தலைவர் என்ற பதவியை உருவாக்கி அதில் தொழில்நுட்பக் கல்வி ஆணையரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்த காரணத்தால் துணைவேந்தர் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.
மாணவர் சேர்க்கைக் குழுவின் இணைத் தலைவராக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் நியமிக்கப்பட்டிருப்பதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்கமே நடத்தும் என்ற நிலையும் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில், 570க்கும் மேற்ப்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில், அரசு கலந்தாய்வு மற்றும் கல்லூரி நிர்ணயம் செய்யும் பணியை அண்ணா பல்கலைக்கழகம் கவனித்துக் கொண்ட நிலையில், தற்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது பற்றி மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.