கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகள் மற்றும் 2018 பிப்ரவரி மாதம் நடைபெற்ற அரியர் தேர்வுகளில் விடைத்தாள் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.அந்த விடைத்தாள் மோசடியில் ஈடுப்பட்ட 130 மாணவர்களின் பட்டங்களை ரத்து செய்து அவர்களை மீண்டும் தேர்வு எழுதக்கூறி அண்ணா பல்கலைக் கழகம் உத்திரவிட்டுள்ளது.
2017 மற்றும் 2018ம் ஆண்டு நடந்த தேர்வில் விடைத்தாள் மதிப்பீட்டில் மோசடி நடந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கு புகார்கள் வந்தது.அதையடுத்து, விடைத்தாள்களை சோதித்த போது, 15 முதல் 20 அரியர்கள் வைத்திருந்த ஒரு சில மாணவர்கள் ஒரே முயற்ச்சியில் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, விடைத்தாள் மதிப்பீட்டில் மோசடி நடந்திருப்பதை அவர்கள் உறுதிசெய்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, பின் மூத்த பேராசிரியர்கள் அடங்கிய விசாரணை குழு அமைத்து அண்ணா பல்கலைக் கழகம் விசாரணை மேற்கொண்டது.
அப்போது, 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடைத்தாள்களை மாற்றி மோசடியில் ஈடுபட்டிருப்பதையும் அதற்கு தற்காலிக அலுவலக உதவியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உடந்தையாக இருந்திருப்பதையும் கண்டுபிடித்தனர்.மேலும், செமஸ்டர் தேர்வின் போது மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களில் இருந்து குறிப்பிட்ட மாணவர்கள் விடைத்தாள்களை மட்டும், தற்காலிக ஊழியர்களின் உதவியுடன் எடுக்கப்பட்டு, பின் சரியான பதில்களை எழுதிய வேறு விடைத்தாள்களை மாற்றி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மோசடி நடக்க உடந்தையாக இருந்த தற்காலிக ஊழியர்கள் 37 பேரை பணி நீக்கம் செய்து, அண்ணா பல்கலை உத்திரவிட்டுள்ளது.இந்நிலையில், விடைத்தாள் மோசடி செய்து தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பட்டத்தை ரத்து செய்து, மீண்டும் அவர்கள் தேர்வு எழுத வேண்டும் என அண்ணா பல்கலை உத்திரவிட்டுள்ளது.